திங்கள், 15 மார்ச், 2010

துரோகம்

யாராவது திருடிச் சென்று விடுகின்றனர்..
எனக்கும் மறைத்து வைக்கத்
தெரியவில்லை எதையும்..

காலப்போக்கில்
திருடக் கற்றுக் கொடுத்துவிட்டார்கள்
எனக்கும்..
முதன்முறை திருடிய போது
கையும் களவுமாய் மாட்டிக் கொண்டேன்..

பலரும் திருடியதை
நானே திருடியதாக சொல்லி
தண்டனை விதிக்கப்பட்டது..
என்னெதிரிலிருந்த
என்னிடம் திருடிய
யாரும் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை..

ஒரு துரோகம் கருவறையிலிருந்து
வெளியேறிக் கொண்டிருந்தது..

சிங்கத்தின் கதை

பூங்கா ஒன்றில்
உட்கார்ந்திருந்த போது
‘எனக்கொரு கதை சொல்லு’
என அடம்பிடிக்க
சிங்கத்தின் கதையொன்றை
சொன்னாய்..

விழி விரித்து
இமை கொட்டாமல்
கேட்டுக் கொண்டிருந்தேன்..
உன் குரலின்¢ ஏற்ற இறக்கத்திற்கும்
உன் கையசைவிற்கும்
என் தலை அசைந்தது..

வீடு திரும்பிய பின்
அதைப் பற்றியே யோசித்திருந்தேன்
அன்றிரவு கனவில்
இரண்டு சிங்கங்கள்
என்னை துரத்தி வந்தது..
அதில் ஒன்றிற்கு உன்
முகத்தில் சாயல் இருந்தது..

புண்

தொடுவதெல்லாம்
பொன்னாக வேண்டுமென்ற
ஆசையில்லை..
புண்ணாக்காமல் இருந்தால்
போதுமானது..

சராசரிகளில் ஒருத்தி

குற்றத்தை சுமத்தும் அளவிற்கு
நான் குற்றமற்றவளோ
குற்றத்தை சுமக்கும் அளவிற்கு
நான் குற்றவாளியோ அல்ல..

சரியும் தவறுகளும் உடைய
சராசரிகளில் ஒருத்தி..

திருத்திக் கொள்ளச் சொன்னால்
திருத்திக் கொள்வேன்..
பொறுத்துப் போகச் சொன்னால்
பொறுத்துப் போவேன்..

எனக்கும் உன்னுடைய
கனவுகளைப் போலான
கனவுகள் வந்து போகின்றன..
நீ அடைக்காக்கிறாய்
நான் பொரித்து விடுகிறேன்..

நம்ப முடியவில்லை

இன்றுடன் முடிவுக்கு வந்து விட்டதாக
நம்ப முடியவில்லை..

எனது சொற்களுக்கு இந்த முடிவை
தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல்லாமல்
போய்விட்டதை ஏற்க முடியவில்லை..

எனது கண்களுக்குள் புகும் ஒளியினை
ஒரு நிழலைப் போல உள்வாங்குகிறேன..

எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும்
ஒரு துளி கண்ணீரைப் புதைத்து செல்கிறேன்..

எதிரே வரும் உனக்கு
தெரிந்திருக்குமா?
இன்றுடன் நானும் முடியப் போகிறேனென..


வலிகளின் வலி

காதலை விட மலிவானதும்
விலையுயர்த்ததும்
ஏதுமில்லை..

எதைக் கொடுத்தும்
வாங்கி விடலாம்.
எதைக் கொடுத்தும்
பெற முடியாது..

காதல்
முரண்களின் முரண்
சுகங்களின் சுகம்
வலிகளின் வலி

வாழ்தல்

சாகத் துணிந்தவளை
வாழ வைக்க மீட்டெடுத்தாய்..
வாழ்தல் எனும் பெயரில்
செத்துக் கொண்டிருக்கிறேன்
நொடி நொடியாய்..

என் அழுகுரல்

என்ன முடிவெடுத்துள்ளாய்?
என் மரணத்தின் இளைப்பாறாலாமென்றா?
என் வலியில் துயில் கொள்ளலாமென்றா?

எதுவாயினும்
புன்னகை மாறாமல் ஏற்றுக் கொள்கிறேன்
கொடுப்பது நீயாயிற்றே..

ஆயுள் முழுக்க
என் அழுகுரல்
உன் இதயத்தின் அறைகளில்
ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்
மறுதலிக்க
பயன்பட்ட சொற்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
உனக்கெதிரான ஆயுதமாகி
நள்ளிரவுகளில் நிழலாடும்..

அந்நிழலின் காலடியில்
என் கொலுசின் ஒற்றை மணி
ஆடிக் கொண்டிருக்கும்..

மௌனத்திற்கு கிடைத்த பரிசு

பற்றி எரியும் துயரத்தினூடே
பயணப்படுமென்
மெல்லிய பாதங்களில்
சதைகளே இல்லை..
எலும்பும் எரிந்து
சாம்பல் துகள்கள்
கொட்டிக் கொண்டிருக்கிறது..

அனைத்து உறுப்புகளும்
சாம்பலான பின்னும்
உன் வருகைக்கு வாசலான
கண்களும்
நீ வசித்திருந்த ஒற்றை
இதயமும்
முற்றிலும் எரியாமல்
மீந்து கிடக்கின்றன..

உன் வீட்டில் எடுத்துச்
சென்று பத்திரப்படுத்து..
யாரேனும் கேட்டால் சொல்..
உன் மௌனத்திற்கு கிடைத்த பரிசென்று

உதிர்ந்த இறகு

ஒருமுறை சொன்னாய்
‘பாரதியின்
அக்னிக் குஞ்சு..’

மனதுக்குள்
நினைத்துக் கொண்டேன்
‘பிரமிளின் உதிர்ந்த இறகு’

கால மொட்டவிழ்ந்து
தீப்பற்றியெறிந்த என் சிறகுகளில்
பிழைத்துக் கிடக்கிறது
உதிர்ந்த ஒற்றை இறகு..

சந்தர்ப்பம்

வாழ்விற்கும் மரணத்திற்குமான
போராட்டத்தில்
தொடர்கிறது பயணம்..

சில சமயங்களில்
வாழ்வதற்கான ஈடுபாடும்..
சில சமயங்களில்
மரணித்தினூடான ஆர்வமும்..

நிழலும் ஒளியுமாய்
வந்து போகின்ற
எண்ணங்களின் பிடியிலிருந்து
விலக்கிக் கொள்ள
சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை..

எந்த காலை இடமாற்ற

ஒரு நள்ளிரவில்
வாழ்க்கையின் ஒளிக்கீற்றுக்குள்
காலடி வைக்க எத்தனிக்கையில்
கதவு தட்டும் ஓசை கேட்டு
திறந்த போது
ஒரு கையில் ஒளிபந்துடனும்
மறுகையில் நிறமிழந்த பூக்களுடனும்
நின்றிருந்தது மரணம்..

வாழ்வின் பாதையிலொன்றும்
மரணத்தின் பாதையிலொன்றுமாய்
வைத்திருந்த கால்களில் ஒன்றை
இடமாற்ற நிர்பந்திக்க படுகிறேன்..
எந்த காலை இடமாற்ற?

கானல் வெளிச்சம்

இன்னும் காலம் தேவைப்படுகிறது
என் வலியின் ஈரம் உலர..

வருடுகிற காற்றும்
ஈரத்தை சொரிந்து செல்கிறது..

என் சிறகுகள் முற்றிலுமாய்
நனைந்து விட்டது..

புலரும் வெயிலுக்காக
புல்வெளியில் தன்னந்தனியாய்
நடுங்கியபடி காத்திருக்கிறேன்..

தொலைதூரத்தில்
வெளிச்சம் மேலெழும்புகிறது
விரைவில் ஈரம் உலர்த்துவதற்காக
நெருங்கி செல்கிறேன்..

நான் நெருங்க நெருங்க
விலகிச் செல்லுமதன் பெயரை
நானறியத் தாமதமாயிற்று..
அது ‘கானல் வெளிச்சமென’

நட்பு மட்டுமல்ல

உன்னால்
செவிமடுக்கப்படாமல்
ஓய்ந்து கிடக்கிறதென்
சொற்கள்..

காற்றடித்து
தள்ளிப் போகுமதனை
யார் கண்ணும் பட்டுவிடாமல்
பத்திரப்படுத்தி
உன் வீட்டு சாளரத்தின் இடுக்குகளில்
மறைத்து வைத்து திரும்புகிறேன்..

சாளரத்திலிருந்து வெளியேறும்
காற்றிலென் சொற்களின்
வாசனையறிந்து
அந்த நள்ளிரவில்
நீ பதறியெழுந்தால்
உனக்குள்ளிருப்பது
நட்பு மட்டுமல்ல.

உன் வண்ணங்கள் என் வாசனை

விளையாட்டாய் துவங்கிய
என் இயங்குதலில்
எந்த மறுதலிப்புமின்றி
நீயும் புகுந்து கொண்டாய்..

நேரமாக ஆக
மாறி வரும் உச்சத்தை
இருவரும் விரும்பினோம்..

பொழுதுசாயும் வேளையில்
திரும்புகையில்
உன் வண்ணங்கள் என்னிலும்
என் வாசனை உன்னிலும்
ஒட்டியிருந்ததை
கவனிக்காமலே
அவரவர் பாதையில் சென்றோம்..

என் இரவுகளில் வண்ணங்களும்
உன் இரவுகளில் வாசனையும்
நிரம்பியிருந்ததை
யாருமறிந்திருக்க வில்லை..

அதை கைமாற்றிக் கொள்ளும் நிமித்தம்
நிகழ்ந்த சந்திப்பில்
மீண்டும் விளையாடத் துவங்கினோம்..

வண்ணங்களில் வாசனையும்
வாசனையில் வண்ணங்களும்
இரண்டறக் கலந்து
எதை யார்
எப்படிப் பிரித்து செல்வதென
தெரியாமல்
விளையாடிக் கொண்டிருந்தோம்
நள்ளிரவைக் கடந்தும்.

பாதரசதுளிகள்

மௌனத்திலிருந்து தோற்றுப் போய்
வெளியேறுகிறது என் நிழல்..

அடர்ந்த மௌனம்
பின் தொடர்கிறது..

பாதரசத்துளிகளைப் போல
உருண்டோடும்
கண்ணீர் துளிகளின்
இயக்கம் தாளாமல்
வழித்தடமெங்கும்
சிறு பள்ளங்கள் மேவுகிறது..

இயலாமையின் கூக்குரலை
யார் காதுகளுக்கும்
எட்டாத வண்ணம்
இதயத்தில் குழி தோண்டி
ஆழ புதைக்கிறேன்..

உன்னை நினைத்து விடுகையில்
சட்டென திரளுகிறது
இயலாமையின் பாதரசதுளிகள்..

புன்னகையின் குப்பி

ஒருமுறை
கடற்கரைக்குச் சென்றபோது
கண்ணீரைச் சேமித்து
வைத்திருந்த குப்பி
தவறி விழுந்துவிட்டது
கடலில்..

அதற்கு பிறகான நாட்களில்
கடல்நீர் இன்னும் கரிப்பதாய்
கடலோர மக்கள்
பேசிக் கொண்டிருப்பதாக
யாரோ சொல்ல..

மீதமிருந்த
கொஞ்சம் புன்னகையை
குப்பியில் நிரப்பிக் கொண்டு
கடலை நோக்கி விரைந்தேன்..

எனக்கு முன்னதாக
ஒருவன் தன் புன்னகையின்
குப்பியை கடலில்
மிதக்க விட்டிருந்தான்..
என்னிடமிருந்த புன்னகையை
அவனிடம் சேர்ப்பித்துவிட்டு
திரும்பினேன்..

ஒரு மாலையில்
மக்கள் பேசிக் கொண்டனராம்
வலையில் விழும் மீன்களுக்கு
பற்களின் எண்ணிக்கைக்
கூடியிருப்பதாக..

கல்வாரி மலை

நான் செல்வதற்கு
சிறிய ஒற்றையடிப் பாதைதான் இருந்தது..
மலைமுகட்டிலிருந்து
எந்த பக்கம் திரும்பினாலும்
பயத்தினையளிக்கும் விதமான
சரிவுகளே தென்பட்டன..

வந்த வழியே திரும்பி பார்க்கிறேன்
என் கையிலிருந்து சிந்திய
விதைகள் மரமாகி அடர்ந்திருந்தன..

ஏது செய்வதென்று தெரியாமல்
அந்த ஒற்றையடிப் பாதையில்
செல்கிறேன்.
முள்முடி தரித்த
கருணா மூர்த்தியின் இரத்த சுவடுகள்
காட்சியளித்தன..
சிறிது தூரத்தில் அது
கல்வாரி மலையின் உச்சியை
சென்றடைந்தது..

அங்கே எனக்கென ஒரு சிலுவையும்
முள் முடியும் தரப்பட்டது..
மூன்றாம் நாள் உயிர்த்தெழ மட்டும்
வாய்ப்பின்றி போனது..

நீ என் தொடக்கம்

கவிதை
என் பலம்
அதுதான் பலவீனமும் கூட..

மௌனம்
என் ஆயுதம்
அதுதான் அடைக்கலமும் கூட..

காதல்
என் சுகம்
அதுதான் உச்ச வலியும் கூட..

நீ
என் தொடக்கம்
எனது முடிவும் கூட

திங்கள், 8 மார்ச், 2010

நிழலில் உறங்கும் வெயில்

முற்றமெங்கும் கொட்டிக் கிடந்தது வெயில்
வீட்டுக்குள் ஒளிந்திருந்தது நிழல்
இரண்டும் அதனதன் எல்லைக் கோட்டில்
ஒன்றையொன்று வெறித்தது
வெயிலுக்கு நிழலில் இளைப்பாறவும்
நிழலுக்கு வெயிலில் காயவும்
ஆர்வம் மேலிட
ஒப்பந்தம் போட்டுக் கொண்டன
பகல் முழுக்க நிழலில் வெயில் உறங்குவதென்றும்
இரவினில் வெயிலில் நிழல் காய்வதென்றும்..

சிரி அழு

நான் அழுகிறேன்
அவன் சிரிக்கிறான்
கரைந்தோடிய மௌனத்தில்
அதிர்வுகளை விட்டுச் சென்றிருந்தான்

நான் சிரிக்கிறேன்
அவன் அழுகிறான்
வெளிப்படுத்திய வார்த்தைகளில்
ஒன்றிரண்டு பதம் பார்த்திருந்தது

நான் அழுகிறேன்
அவனும் அழுகிறான்
இடைவெளியிலிருந்த காதல்
தேற்றுவாரின்றி கிடந்தது

நான் சிரிக்கிறேன்
அவனும் சிரிக்கிறான்
குறைந்த ஒளியில் சன்னமாய்
குரல்கள் மட்டுமே கேட்கிறது..

குருதிதுளிகள்

சிறகுகளை
ஒவ்வொன்றாய் பிய்த்து போட்டபடி
அந்த கானக வெளியினைக் கடந்தேன்
என்னைத் தேடி வரும் அவனுக்கு
நான் காணாமல் போவதையும்
அடையாளப்படுத்தி..

நெடுநாட்களாகியும்
யாரும் தேடி வராத நிலையில்
காய்ந்த குருதிதுளிகள்
தக்கைகளாயும்
சிறகுகள் இடமாறியும்
போயிருந்தனவென்று
எனக்கு பின்னால் வந்த
பருந்தொன்று
சொல்லிச் சென்றது..

சிதைந்த என் அடையாளங்களைத் தேடி
மீண்டும் வந்த வழி திரும்பினேன்..
சிறகுகளேதும் காணப்படாத நிலையில்
துயருற்று முள் மரத்தின் அடியில்
மருகி நிற்கையில்
அதன் கிளையொன்றில்
என் அத்தனை இறகுகளும்
சேகரிக்கப்பட்டிருந்தது
அருகிலேயே பாதுகாப்பாய்
அவனும்.

பிம்பம்

பாசாங்கற்ற புன்னைகையில்
உதிர்ந்தது முதல் பிம்பம்
தோழமையான பேச்சில்
உரிந்தது அடுத்த பிம்பம்
நெருக்கமான இடைவெளிகளை
நிரப்பியது மறு பிம்பம்
இப்படியாக பிம்பங்கள்
ஒவ்வொன்றாய் கழன்று விழ
முடிவில் வெளிப்பட்டது
எந்த சாயலுமற்ற பிம்பம்
அதில் பார்க்க முடிந்தது
எனது பிம்பத்தையும்..

நானுறங்காமல் விடியும் பொழுது

நகர மறுக்கும்
இரவுப் பொழுதுகளில்
ஏதிலியாயிருக்குமென்
உணர்வுகளை
வெகுதொலைவிலிருக்கும்
சிறு நட்சத்திரங்கள்
கண்சிமிட்டி நோக்குகின்றன..

அருகிலிருக்கும்
உன் அசைவுகளை
கண்ணுற்றபடி
சோர்ந்து துவளும்
கண்கள் துயிலுவதில்லை

துயரின் பிடியிலிருந்து
விலகிட முடியாத
மென் சோகத்தின்
புள்ளிகளைச் சுற்றியே
என் நிகழ்தலின் கோலம்
வரையப்பட்டிருக்கிறது

தொட்டுத் தொடரவோ
விட்டு விடவோ கூடாமல்
தனித்தலையும் என் இரவினை
சொட்டு சொட்டாய் கரைக்கிறேன்
நானுறங்காமல் விடியும் பொழுதுகளில்
உன் புன்னகையின் வெளிச்சத்தில்..

அழகுபடுத்த வேண்டியவை

இறந்த செல்களைப் புதுப்பித்து
வலி பொறுத்து தேவையற்ற முடிகளை நீக்கி
கதிரியக்க சிகிச்சை செய்து தோல் வழவழப்பாக்கி
சிலவகை திரவியங்களைதோலில் பூசி மினுமினுப்பாக்கி
சில பானங்களைப் பருகி, பழங்களை உண்டு
அவ்வளவுதான் முடிந்துவிட்டது
புறத்தில் அழகுபடுத்த வேண்டியவை

தேவையற்ற பேச்சுகளைக் குறைத்து
நேரத்தை ஒழுங்காக நெறிப்படுத்தி
சில புத்தகங்கள்
இயற்கையோடு இயைந்த வாழ்வு
அகத்தில் அழகைக் கூட்ட
இவற்றுடன் நீக்கமற நீயும்