வியாழன், 26 ஆகஸ்ட், 2010

நம்மாலான முயற்சி

கண்ணெதிரே நடக்கும்
கொடுமைகளை
சிமிட்டாது காண பழகிவிட்ட
கண்களை
ஒன்று பிடுங்கியெறி
அல்லது
கொடுமை நடக்கும் இடங்களைக்
காண்பதைத் தவிர்..
அல்லது
கொடுமைகளை
பார்வை நெருப்பாலெறி...

காதுகளில் கேட்கும்
அராஜகங்களை சலிக்காது கேட்க
பழகிவிட்ட காதுகளை
ஒன்று அறுத்தெறி..
அல்லது
அந்த மாதிரியான
விஷயங்களைக் கேட்பதைத் தவிர்..

புலன்கள் உணரும்
அத்துணை தீமைகளையும்
அழித்தொழிக்க முனையும்
நசுக்கிவிடத் துணியும்
சில மனதிற்கு
நம்பிக்கையை விதைப்பதாவது
நம்மாலான முயற்சியாய்
இருக்கட்டும்..

என் கடைசி விருப்பம்

உனக்கொரு கடிதம் எழுதுகிறேன்
உயிரின் அசைவுகளையும்
உள்ளத்தின் விருப்பங்களையும்
ஒருங்கே கூட்டி...
எனது செல்களில்
பாதி இறந்து விட்ட போதிலும்
உனக்கொரு கடிதம் எழுதுகிறேன்..
(உயிர் போகும் வேளையிலும்
கையிலே அலைபேசி இருந்தும்
உதவி கோரி கடிதம் எழுதுவது
தமிழுக்கொன்றும் புதிதில்லையே)
எழுதிக் கொண்டிருக்கிறேனென்
இரத்தத்தால்..
உன்னைத் தவிர
வேறு யாராலும்
நிறைவேற்றப் பட முடியாத
என் கடைசி விருப்பத்தினை..

ஒரு போர் முடிவுக்கான ஆயத்தத்துடன்

சாப்பிட வாருங்கள்
நண்பர்களே..
எனது செங்குருதியினை
கடுகு தாளித்து பொரியலாகவும்
எனது எலும்புகளை
இஞ்சி பூண்டு தட்டிப் போட்டு சூப்பாகவும்
எனது மூளையினை
சிறிது மிளகு சேர்த்து வறுவலாகவும்
எனது வலுவற்ற தசைகளை
அரிந்து குழம்பாகவும்
இடையிடையே அருந்த
எனது துயர்மிகு நினைவுகளையும்
மேசை மீது வைத்துள்ளேன்.
உங்களில் யாராவது
சோறாக சமைய சம்மதமெனில்
அமரலாம்.
ஒரு போர் முடிவுக்கான
ஆயத்தத்துடன்.

இளைப்பாறுதல்

‘களைப்போடிருப்பவர்களே
என்னிடம் வாருங்கள்
இளைப்பாறுதல் தருகிறேன்’
என்றவரைக் களைப்போடு
சந்திக்கச் சென்றேன்.
மெல்ல ஊர்ந்த
நீண்ட வரிசையில்
கடைசி ஆளாக
நின்று கொண்டிருந்த
எனக்குப் பின்னும்
ஒருவர் வந்து சேர்ந்தார்.
திரும்பிப் பார்த்தேன்
களைப்போடு காணப்பட்டார்
மேற்கண்ட
வாசகத்துக்குச் சொந்தக்காரர்

தப்பிய அந்த சொல்

இருசக்கரவாகனத்தில்
மேம்பாலத்தில்
ஏறிக் கொண்டிருக்கையில்
கவிதைக்கான ஒரு சொல்லை
காதுகளில் வழிந்திருந்த
ஒரு பாடலில் இருந்து
பிடித்துக் கொண்டேன்.
அலுவலகம் வந்த பின்பு
நெடுநேரம் கழித்து வந்தது
அந்த சொல்லுக்கான நினைவு..
மீண்டும் மீண்டும்
நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.
அந்த பாடலையும் முணுமுணுக்கிறேன்
உள்ளிருந்து தப்பிய அந்த சொல்
அகப்படவில்லை..
பல பிரயத்தனங்களிலும் சிக்காத
அது ஒருவேளை
என்னைத் தேடியபடியிருக்குமோ
எனும் ஆதங்கம் மேலிட
அனைத்து வேலைகளையும்
அப்படியே விட்டுவிட்டு
இருசக்கரவாகனத்தில் செல்கிறேன்
மேம்பாலம் நோக்கி
காதுகளில் இசை வழிய..

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

உன் ஒற்றைச் சொல்

இயல்பாய்
ஒரு சொல்லை
எனக்களித்தாய்

ஆரவாரமின்றி
இரண்டு சொற்களாக
திருப்பித் தந்தேன்

அவற்றிலிருந்து
அறுவடை செய்து
நான்கு சொற்களை
வழங்கினாய்

அந்த நான்கு சொற்களையும்
செதுக்கி அலங்கரித்து
உன் வீட்டு முற்றத்தில்
வைத்துச் சென்றேன்..

மறுநாள் காலையில்
என் சன்னலோரத்தில்
பதினாறு சொற்கள்
குவியலாயிருந்தன..

அன்றிரவு
அந்த பதினாறையும்
ஒருவழியாக்கி
உன் வயலில் விதைத்து திரும்பினேன்

அதிகாலையில்
என் மாந்தோப்பில்
160 மூட்டை சொற்கள்
கிடத்தப்பட்டிருந்தன..

அவற்றை சுமந்து வந்து
பதினாறாயிரம் மூட்டைகளாக
உன் முல்லைக்காட்டில்
இறக்கித் திரும்பினேன்..

திணறியபடி வந்து
முன்னர் அளித்த
ஒற்றைச் சொல்லைத்
திரும்பக் கேட்டாய்..

எடுத்துக் கொள்ளென
எனதறையின் வாசலைத்
திறந்துவிட்டேன்..

உன் சொல்லிலிருந்து
பல்கிப் பெருகிய
கோடானுகோடி சொற்கள்
அடைபட்டிருந்தன..

அதிலிருந்து
உன் சொல்லைப்
பிரித்தெடுத்து
வெளியேறினாய்..

சில நொடிகளில்
வெடித்து சிதறி
பால் வெளிமுழுதும்
பரவிக் கிடந்தது
உன் ஒற்றைச் சொல்..
.

அறுவடை

எதை விதைக்கிறோமோ
அதுவே அறுவடையாகுமெனில்
காதலை விதைத்தால்
கண்ணீர் அறுவடையாவது
ஏன்
?

நாளை

ஏந்தி நிற்கும் கைகளுக்கு
வெறுமையை அளிக்க
ஒருபோதும் துணியாதே..
அந்தக் கைகள்
நாளை உன்னைக்
காப்பாற்றும் சூழலைக்கூட
பெறலாம்..

பொங்கி நிற்கும்
கண்களுக்கு
தீயிட முனையாதே.
அந்த கண்களே
நாளை உன்னை
வழிநடத்தக் கூடுவதாக
இருக்கலாம்..

நாடிவரும் கால்களுக்கு
மூடிய கதவினைக்
காட்டாதே..
அந்தக் கால்கள்
நாளை உன்னை
சுமந்து செல்ல நேரலாம்..

ஆயிரமாயிரம் வார்த்தைகளுக்கும்
மௌனத்தையே
பதிலாய் தராதே..
அந்த வார்த்தைகள்
நாளை உன்னை
இக்கட்டிலிருந்து
காப்பாற்றலாம்.
..

பெரு மரம் - சிறு பறவை

பெரு மரம் பெண்
சிறு பறவை ஆண்
பெருமரத்திலிருந்து
சில கனிகளைக்
கொத்தித் தின்பதிலேயே
நிறைவடைகிறது
பறவை..
தின்ற விதையை
ஒரு மரமாகவோ
பறவையாகவோ
விதைத்து விட்டு..
.

உன் கண்ணீரில் என் பிம்பங்கள்

கடைசி ஆசை ஏதேனும்
உண்டா? என சாகும் தருவாயில்
கேள்வி கேட்கப்படுகிறது..
சொற்களை இழந்த நான்
என் அசைவுகளில் வெளிப்படுத்துகிறேன்..
உன்னுடன் வாழ வேண்டுமென
மறுதலிக்கத் திராணியற்று
மண்டியிடுகிறாயென் முன்
கண்களில் நீர் வழிய..
உன் கண்ணீரில் என் பிம்பங்கள்
அசைகிறது முடிவுறா காதலைக்
கொண்டாடியபடி..

இப்படியே இரு..

எப்போதும்
இப்படியே இரு..
பெரும் துக்கமும்
சிறு சந்தோஷமும் தந்து..
கவிதைகளாவது பிறக்கட்டும்.

வித்தியாசமே

அறிவிக்கப்படுகிற வெற்றிக்கும்
அறிவிக்கப்படாத தோல்விக்குமான
வித்தியாசங்கள்..
சொல்லப்படாத காதலுக்கும்
சொல்லப்படுகிற நட்புக்கும்
இடையிலான வித்தியாசமே

வாழ்வே இறப்பு

ஈயென இரத்தலுக்கு
இறப்பே மேலாம்..
ஈயென இரந்தும்
ஈயாதவனுக்கு
வாழ்வே இறப்பு.