புதன், 10 பிப்ரவரி, 2010

ஒற்றை விதை


காலத்தோடு
பயிர் செய்ய சொன்னாய்..
தயங்கி நின்றேன்...

தயாராகிறேன்..
நீ அறுவடை முடித்து
செல்கிறாய்..
இந்த ஒற்றை விதையை
என்ன செய்ய?

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

வலி


உன் ஆறுதலான வார்த்தைக்கும்
அக்கறைக்கும் முன்னால்
என் வலிகள்
பலமிழந்து திரும்பும்..

வரம்


எப்போதும்
உன் அசைவுகளையும்
ஆசைகளையும்
அறிந்து பயணிக்கும்
வரம் போதும்
என் ஆயுளுக்கும்..

என் நேசம்


பரிசோதனை முயற்சிகளில்
தோல்வியுறும்
என் நேசம்
இறுதியில் வென்றே தீரும்
தோல்விகளின் தொடர்தலையும்
வெற்றியின் தொடுதலையும்

தவணைமுறை












சுழற்சிமுறையில்
இயங்குகிறதென் உடல்
தவணைமுறையில்
இயங்குகிறதென் மனம்
சுவாசம் உணரவும் முடியாத
ஒடுதலில்
உனக்கான
நேசத்தை மட்டும்
தவறாமல் தந்து விடுகிறேன்
என் சுயமிழந்த நேரங்களிலும்..

சிவப்பு நிற குருதி










சொட்டுச் சொட்டாய்
வடியும் கருஞ்சிவப்பு நிற குருதியில்
எஞ்சியிருக்கிறது
உன்னுடன் இணைய முடியாத
இரவின் தவிப்புகளும்
தாமதமாய்
வீடு திரும்புமென்
பணியின் சுமைகளும்..

வியாழன், 4 பிப்ரவரி, 2010

காற்றும் காதலும்












தனியே சுற்றியலையும் காதல்
பேசியபடியிருக்கிறது
காற்றோடு..

காற்றை
தானறியாமல்
சுவாசிப்பது போல காதலையும்
சுவாசித்து செல்கின்றோம்
எல்லா கணங்களிலும்

காற்றும்
காதலும் கண்ணில் தெரிவதில்லை
உயிரில் உணரப்படுகிறது..

காற்று பெயரும் தோறும்
காதலும் பெயரும்
காற்று நுரையீரலுக்கும்
காதல் இதயத்திற்கும்..

நள்ளிரவில்










இரவுகளைத் தின்று
செரித்தவன்
இன்று
இதயத்தைக் கொத்தி உண்கிறான்..
பலமையில்களுக்கு
அப்பாலிருக்கையில்
பொழியப்பட்ட காதலும்
தூவப்பட்ட வார்த்தைகளும்
மூச்சுக்காற்று
உரசிக் கொள்ளும் தூரத்தில்
கனத்த மௌனங்களை
நிரப்பியபடி ..

விதைத்த காதலின்
மொத்தமும்
இவ்வளவு விரைவாக
அறுவடையை
நோக்குமென
எதிர்பார்த்திருக்க
வாய்ப்பில்லை
அவனும் காதலும்

நள்ளிரவில்
அலைபேசியிலிருந்து
கசியும் ஒளியில்
கசிந்து கரைகிறது
நேசமும் நெருக்கமும்..

மூன்றாம் நாள்













பேசுகிற வார்த்தைகளுக்கும்
நடைமுறை வாழ்க்கைக்கும்
இருதுருவங்களுக்கிடையேயான
வேறுபாடு..

நேசத்தில் கொடுக்கப்படும்
வாக்குறுதிகள்
கோபத்தில் மறுதலிக்கப்படும்

மூன்றாம் முறையான
மறுதலித்தலில்
காட்டிக் கொடுக்கப்படும்
காதலின் இன்னொரு முகம்..

அது குற்றங்களைப்
பட்டியலிட்டு
பிரிவுச் சிலுவையில்
அறைந்த பிறகே வெளியேறும்..

மூன்றாம் நாள்
உயிர்த்தெழ
சாம்பலிருக்கும்..
அதற்குள்ளே
ஃபீனிக்சின் சிறு இறக்கைகளும்..

நட்புகளின் யாசிப்பின்றி










ஒருபோதும்
மதுவை சுவைப்பதில்லை
நட்புகளின் யாசிப்பின்றி..

உனது யாசிப்பினை ஏற்றத்தில்
மிஞ்சியிருக்கிறது..
கசப்பும் புளிப்பும்..

நேற்றிரவு மயக்கத்திலுன்
கை நழுவிய
கண்ணாடிக் கோப்பையின்
சில்லுகளைப்
பொறுக்கி எடுத்தென்
என் கை கிழித்துவிடாமல்..

இன்று உச்சிப் போதில்
வெளியேறிய
உன் வார்த்தை சில்லுகள்
பொறுக்கப்படாமலே
கிழித்து எறிந்திருக்கிறது
காதலின் சில பக்கங்களை

கண்ணாடிக் கோப்பை










உனக்கு மகிழ்ச்சியளிக்கும்
மது ஊற்றப்பட்டிருக்கும்
கண்ணாடிக் கோப்பை
நிறமேறுகிறது..

இரைப்பைக்குள்
இறங்குகையில்
நிறமாற்றுகிறது..

நிறங்களற்ற
இரவில்
மதுவின் வாசமே நிறமாகிறது.
தனிமையினை
உரித்து உடுத்துகிறது
மதுவின் வாசம்..

பிரிவு













சிறிய பிரிவுகள்
சுவரின் விரிசல்கள்
அவ்வப்போது பூசப்பட்டுவிடும்..

பெரிய பிரிவுகள்
சுவரின் பிளவுகள்
அவை அப்புறப்படுத்தப்பட்டு
புதிதாக எழுப்பப்பட
வேண்டியவை..

சிறியதோ பெரியதோ
பிரிவுகள்
வலியாகவும்
வழியாகவும்
இருக்கக் கூடியவை..

ஊற்றுக் கண்













மலைமுகடுகளின்
அடியில் கசியும்
அல்லது ஊறும்
நீர் சலசலப்பற்றவை

பெருமலையின் மேலிருந்து
கொட்டும் நீருற்றின் கண்
எங்கோ ஒரு சுனைநீரிலிருந்து
பிறக்கிறது..

ஊற்றுக் கண் தேடியலைந்து
மானின் கண்கள் சோர்வுற்று
நிழலில் ஒதுங்குகிறது..

நிழலோரத்தில்
இலைகள்
மேவிக்கிடந்த நீருற்று
காற்றின் விலக்குதலில்
கண்ணிற்பட்டது..

தாகம் தீர மான் நீரை
உறிஞ்சுகிறது..
ஊற்றிலிருந்து
நீர் புதிய புதிய
இசையோடு வெளிப்படுகிறது..

பொய்யும் காதலும்













யாரிடமும்
யாசித்ததில்லை
எதையும்
பிறர் யாசித்து மறுத்ததுமில்லை..

காதலை யாசித்தாய்
யோசிக்காமலும்
பின்விளைவுகளறியாமலும்
ஒப்புக் கொடுத்தேன்..

உடலினைக் கரைத்து
ஒழுகிய நிணநீர் துளிகளில்
சுவடுகளாய்
படர்கிறதுன்
பொய்யும் காதலும்..

வாலறுந்தபல்லி













நசநசத்த பிற்பகலில்
மின்விசிறியிலிருந்து
வெளியேறும்
வெப்பக்காற்றில்
வெறுமனேயிருந்த
இடைவெளியை அழித்தேடுத்தாய்..

வழியும் வியர்வைத்துளிகளை
உறிஞ்சியபடி
உனது மூச்சுக்காற்று
பயணிக்கிறது
உடலெங்கும்..

முற்றிலும் ஒலிகுறைக்கப்பட்டு
மாறிக் கசிந்த ஒளியில்
தொலைகாட்சி மட்டுமே
பார்த்தபடி
உள் பதிவுகளை கக்கியபடி
அதன் மூலையில்
ஒரு வாலறுந்தபல்லியும்..

நிழல்













எல்லா நடுநிசிகளையும்
போலில்லையது
அங்கொன்றும்
இங்கொன்றும்
தென்படும்
நட்சத்திரங்களும்
தொலைந்து போன நடுநிசியது..

தொலைதூரத்தில்
பெருமலைக்குப்பின்
காட்சி தர இருக்கும்
சூரியனை
நோக்கிய பயணத்தில்
எதிர்ப்படும் யாவும்
வெளிச்சப்புள்ளிகளின்
நிழல்களே..

நிழலில் ஒதுங்குகிறேன் என
மனம் பதறும்
பிரியமானவர்களே
இது வெளிச்சத்தை
நோக்கிய புறப்பாடு..
இருள்வது போல ஒளிரும்..
ஒளிர்வது போல இருளும்..
இருளும் ஒளியுமாய்
இயங்குதென் இலக்கு..

கடைசிச் சொட்டு


இது கடைசி முத்தமாகவும்
இருக்கக் கூடும்
மழை நின்றபின்
வடியும் இலையின்
கடைசிச் சொட்டு நீராய்..

வேர்

வேர்கள் பிடுங்கப்பட்டு
விசிறியடிக்கப்பட்ட போதெல்லாம்
விழுமிடத்தில்
வேர்விடத் தெரிந்திருக்கிறது..
இருக்குமிடத்தை பொறுத்து
சல்லி வேராகவோ
ஆணி வேராகவோ
உருமாறிக் கொள்ளும்
என் வேர்..

தீர்மானி

எண்கள் மட்டுமே
விடைகளைத்
தீர்மானிப்பதில்லை
அதற்கிடையேயான
குறிகளும்தான்

எண்ணங்கள் மட்டுமே
வாழ்க்கையைத்
தீர்மானிப்பதில்லை
அதற்கொத்த சூழலும்தான்..

விட்டுக் கொடு

எனக்காக ஏதும் செய்பவன்
இல்லையென்று இயம்பாத
இதயமுள்ளவன்
எனக்காக எல்லாமும்
விட்டுக் கொடுத்தான்
இறுதியில்
இரக்கமுள்ளவனாய்
என்னையும்..

வார்த்தை


வார்த்தைகளில் இல்லை
வாழ்க்கை என்றாலும்
வாழ்க்கையை நிறைத்திருப்பது
வார்த்தைகளே..

அத்தியாயம்













முடிந்தது ஒரு அத்தியாயம்
அழுகை, அரவணைப்பு
மிரட்டல், தியாகம்,
சீண்டல் , தீண்டல்
இன்பம், இயக்கம்,
அனைத்தையும் உள்ளடக்கி
முடிந்தது ஒரு அத்தியாயம்

அத்தியாயத்தின்
கடைசிப் பக்கம்
வெற்றாயிருக்கிறது
கையெழுத்திட்டு
மூடி வைக்கிறேன்
கைநழுவிப் போகிறது
கண்முன்னே
முடிந்தது
ஒரு துவக்கத்தின்
அத்தியாயம்..

இந்த நிலம்













யாருக்கும் சொந்தமில்லை
இந்த நிலம்
யாருக்கும் பாரமில்லை
இந்த நிலம்

களைகள், பயிர்கள்
பூச்சிகள், பறவைகள்
யாவையும் தாங்கிய நிலம்
அறுவடை முடிந்து
அமைதியாய்

மழை எப்போதும் வரலாம்
இந்த நிலத்திற்கென
பொழியக் காத்திருக்கும்
மேகத்தின் வரவிற்காக
காத்திருக்குமிந்த நிலம்

விற்றவர்கள் எப்போதும்
பெற்றுக் கொள்ள முடியாது..
பெற்றவர்கள் ஒருபோதும்
விற்க முடியாது..

யாருக்கும் சொந்தமில்லை
இந்த நிலம்
யாருக்கும் பாரமில்லை
இந்த நிலம்

முடிச்சு













அடிக்கடி
முடிச்சிடுவதற்கு
உறவின் முனைகளை
தயார்படுத்துவது சிரமமானது

முடிச்சுகள் வலுவிழக்கும்
முனைகளின் தொய்வால்..

இரண்டு பக்க முனைகளும்
முடிச்சுகளுடனே இருக்கட்டும்
மற்றொரு முனையின்
முடிச்சுக்கு வழிகொடுக்காமல்..

நீளுமிந்த கணங்கள்


உனது
சுவாசத்தின் வாசத்தோடு
வெளியேறும்
வார்த்தைகளை
எனதிதழ்களால் குறிப்பெடுக்கிறேன்..
எனது வார்த்தைகளை
மரணிக்க செய்து

நீளுமிந்த கணங்கள்
முற்றுப்பெறும்
நீயென் பார்வைகளை
குறிப்பெடுக்கையில்..

உரிமை


உனது
பொருட்களின் மீதான
உரிமை
உன்னிடம்
எனக்கிருக்கும்
உரிமையை விட
குறைவானவை.

நேசம் பகிர்

விட்டுவிடு
கரைசேரா
காதலில்
மூழ்கி விடாமல்
எப்போதும் போல்
எல்லோரிடமும்
நேசம் பகிர்
நெருக்கம் கொள்..

மூடி மறை


இதயத்தினுள்
மூடி மறைக்கிறாய்..
சிலவற்றை

கண்கள் வழி
வெளிப்படுகின்றன..
அவை..

அமிழ்ந்த காதல்










நாம் மீண்டும் சந்திப்போம்
காதலை
புதைத்த இடத்தில்..

முன்னர் கொட்டிய
வீண் சொற்களின் எஞ்சிய எலும்புகளும்..
மென் சொற்களின் மிஞ்சிய களிம்புகளும்
தென்படும் தடயங்களாய் ..

நீயும் நானும் பார்த்திருக்க
நமக்குள் அமிழ்ந்த காதல்
வெடித்துச் சிதறியழும்..

ஆற்றுபடுத்த தயங்குகையில்
தானே தேற்றிக் கொண்டு
தொடர்ந்து வரும்
நமது சுவடுகளின்
அடியொற்றி..

அப்போது
நாம் மீண்டும் சந்திப்போம்
காதலை விதைத்த இடத்தில் ...