உன்னைச் சந்திக்க கிளம்புகையில்
வாழ்வதற்கான பெருவிருப்பத்தோடு
இறங்கி நடக்கிறேன் சாலையில்..
என் அறையில் அணைக்க மறந்த
பண்பலையில் பைரவி ராகம்
கசிந்து கொண்டிருந்தது..
எதிர்வீட்டுத் தொட்டிச்செடியில்
இரண்டு பூக்கள் மலர்ந்திருந்தன..
வலதுபக்கத்தின் ஐந்தாவது வீட்டில்
குழந்தைகளின் சிரிப்பு சத்தம் கேட்டது..
தெருமுனையில் பிச்சைக்காரன் ஒருவனுக்கு
உணவளித்தாள் மூதாட்டி ஒருத்தி..
மூன்றாம் தெருவைக் கடக்கையில்
தாய்நாய் தன் குட்டிகளுக்கு
பாலூட்டியபடியிருந்தது..
உன்னை சந்தித்த பின்
மரணத்திற்கான யோசனையோடு
வீடு திரும்புகிறேன்..
தன் குட்டிகளிலொன்றை
விழுங்க முயற்சித்தபடியிருந்தது
தாய்நாய் மூன்றாவது தெருவில்..
அந்த மூதாட்டி பிச்சைக்காரனை
விரட்டினாள் தெருமுனையில்..
குழந்தைகளின் அழுகுரல் காதைக் கிழித்தது
இடது பக்கத்தின் ஐந்தாவது வீட்டில்..
பூக்களின் இதழ்கள் உதிர்ந்து கிடந்தன
எதிர்வீட்டுத் தொட்டிச் செடியில்..
எனது அறையிலிருந்த பண்பலையில்
முகாரிராகம் பாடிக் கொண்டிருந்தது..