அறிந்தோ அறியாமலோ
விரும்பியோ விரும்பாமலோ
எனக்கு மரணத்தை சந்திக்க வாய்த்திருந்தது..
எனக்கு மூத்தவன்
ஒரு வருடத்திற்குமுன்
இறந்தே பிறந்த
கருவறையில்தான்
நானும் கருவாயிருந்தேன்..
மூன்றாம் வகுப்பில்
வகுப்புத் தோழியுடன்
சண்டையிட்டுத் திரும்பிய மறுநாள்
அவள் நெஞ்சுவலியால்
இறந்த செய்தி
அஞ்சலி செலுத்துவதற்காக
சொல்லப்பட்டது..
ஆறாம் வகுப்பில்
பள்ளிக்குச் சென்ற
முதல் நாள்
உடன் நடந்து வந்த தம்பியின் மீது
வாகனம் மோதி அவன்
இரத்த வெள்ளமாய் கிடந்த போது..
பனிரெண்டாம் வகுப்பில்
பெரியப்பாவின் மகள்
கணவனின் சந்தேகத்திற்கு
கருவுற்ற நிலையில்
இரையாகினாள்..
முதுகலை இரண்டாமாண்டு
படிக்கையில்
வயதான காரணத்தால் மரணத்தை
தழுவிய தாத்தா
இறந்த செய்தியைக் கூட
உணரமுடியாமல்
அடுத்த 15 நாளில்
மூளைப்புற்றின் தாக்கத்தில்
உயிர்விட்ட அம்மாவின்
பேரிழப்பு..
எட்டுப்பக்க கடிதத்தைத்
துண்டறிக்கையாக்கிக் கொடுத்து
அதிர்ச்சி அலை ஏற்படுத்திய
முத்துக் குமாரின் உயிர்த்தியாகம்..
பெருநம்பிக்கையின்
அடையாளச் சின்னமான
தமிழ் உணர்வாளர்களின் தம்பி
பெரியாரின் வித்து
சிதைக்கப்பட்டதாக
ஊடக செய்திகள்..
இப்படி மரணத்துடன்
அறிமுக சந்திப்புகள்
பல வடிவங்களில்
வாய்த்திருக்கிறது..
இந்த முறை உடன்படிக்கை
ஒன்றில் கையெழுத்திட
சொல்லிக் காத்திருக்கும்
மரணத்தின் கையிலிருக்கும்
தாளில் என்ன எழுதப்பட்டிருக்கிறது
என அறிய ஆவலுடன்
தயாராகும் எனக்கு
சற்றும் விருப்பமில்லை
மரணித்து வாழ்வதில்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக