ஒவ்வொரு நேற்றையும்
சலவைக்கிட்டுத்தான்
இன்றாக உடுத்த வேண்டியிருக்கிறது..
ஒவ்வொரு நாளையும்
சலவை செய்ய
அதிக நேரம் பிடிப்பதில்லை..
சில நாட்களை சலவை
செய்யவே முடிவதில்லை..
அவ்வளவு கறைகள்
அப்பிக் கொண்டிருக்கிறது..
அதனை தூக்கிப்போடவோ
பழையனவற்றோடு ஒதுக்கவோ
கூடுவதில்லை..
சில நாட்களை சலவை
செய்ய மனம் வருவதில்லை
அவ்வளவு தூய்மையாக
மணத்துடன் இருக்கிறது..
ஆன போதும்
சலவைக்கு வந்து விடுகிறது..
முந்தைய நேற்றுகளிலுள்ள
பெருங்கோபமும்
சிறுசஞ்சலமுமான
அழுக்குகள் நீக்கப்பட்டு
மகிழ்வும், தெளிவுமான
புதிய வாசனை வீசுகிறது
இன்றைய நாளாடைகளில்..
எல்லா நாட்களும்
ஒன்று போல்
சலவை செய்யப்படுவதில்லை..
பரபரப்பும்
பதற்றமுமான
வாழ்க்கைச் சூழலில்
வாரத்தில் உடுத்திய
ஆறு நாட்களையும்
ஞாயிற்றில்தான்
சலவை செய்ய முடிகிறது....
ஞாயிற்றை எப்போது
சலவைக்கிடுவது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக