புதன், 29 செப்டம்பர், 2010

எப்படி

இப்படி
இது நடந்தால்
எப்படி இருக்குமெனும்
எதிர்பார்ப்புடன்
செல்லும் போது
அதற்கு நேர்மாறாக
நடந்தால்
அப்படி வலிக்கிறது
என்பதை
எப்படி புரிய வைப்பது?
இப்படி செய்பவர்களுக்கு..

சுவாரசியம்

அடுத்த நொடி சுவாரசியங்களை
தனக்குள் புதைத்து நகரும்
காலத்திடம்
ஒரு சுவாரசியத்தையாவது
முன்கூட்டியே கேட்டு
தெரிந்துகொள்ள வேண்டுமென
விரும்பி அணுகினேன்..
அதை சொல்லிவிட்டால்
சுவாரசியம் இருக்காதென
ஓடிமறைந்தது..
துரத்தியோடும் போது எதிர்பட்டாய் நீ
ஒரு அழகான சுவாரசியமாக...

ஒத்திகை

எந்த ஒத்திகையும் பார்க்காமல்
காதலில் நுழைந்தாள்..
நேசமும்
நெருக்கமும்
நம்பிக்கையும்
நேர்மையும் என
அவளிடம் இருந்ததை
காதலுக்கு பரிசளித்தாள்..

இவள் காதலுக்கு
உண்மையானவளா என
காதல் அவளிடம் ஒத்திகை பார்த்தது..
அவளுக்கு எப்போதும்
கண்ணீரை பரிசளிப்பதும்
நம்பிக்கையை சிதைப்பதுமாக
மிக கொடூரமான தண்டனை
கொடுத்து சிரித்தது..
முன்பின் கண்டறியாத
பெரும் சோகமும்
பெருந்துக்கமுமாக
வலியுடன் போராடி
இறுதியில் காதலில் வென்றாள்..

காதல் அவளுக்கு அடிமையானது..
இப்போது ஒத்திகை பார்க்க
விரும்பினாள்..
காதலைக் காலடியில் மிதித்து
ஒரு மரணத்தின் அலறலை ரசித்தபடி..

ஒரு காதலின் கதை

அவளுக்கும் அவனுக்கும்
ஒருவரையொருவர் பிடித்திருந்தது..
அது நட்பா? காதலா?
என இருவரும் குழம்பித்
திரிகையில்
அது காதல்தான் என்று அவளும்
அது நட்புதான் என்று அவனும்
முடிவு செய்து கொண்டனர்..

அவள் காதலின் அத்தனை கதவுகளையும்
அலங்கரித்தாள்
அவன் நட்பின் அத்தனை கனவுகளையும்
அலங்கரித்தான்..
இரவுகள் காத்துக் கிடந்தன..
இருவரின் இணைப்பிற்காக..

தன் காதலை உறுதிபடுத்திக் கொள்ள
ஒருமுறை அதை பற்றி பேச ஆரம்பித்தாள்..
அவன் நட்பில் உறுதியாய் இருப்பதாகக்
காட்டிக் கொண்டான்..

அவளுக்கு அவனைத் தவிர
எந்த யோசனையும் இல்லை..
அவனுக்கு இவள் காதலைப் பற்றி
யோசனை இல்லை..
அவள் எத்தனை முறைகளில்
வெளிக்காட்ட முடியுமோ
அத்தனை முறையிலும்
காதலைச் சொன்னாள்..
அவன் எத்தனை முறை
மறுதலிக்க முடியுமோ
அத்தனை முறையும் மறுத்து நின்றான்..

அவள் தற்கொலை செய்துகொள்வதாக
சொல்லியும்
அவன் பிடிவாதமாக இருந்தான்..
சிலநாட்கள் பேசாமல் நகர்ந்தது..
ஒருநாள் அவனுக்கு பேச வேண்டும் போல் இருந்தது..
அழைப்பில் வேறு யாரோ பேசினார்கள்..
அவள் மாரடைப்பு ஏற்பட்டு
இறந்து இரண்டு நாட்கள்
ஆனதாக சொன்னார்கள்..

அவனுக்கு இப்போது உலகம்
இருண்டுவிட்டது போலிருந்தது..
அவள் அளித்த பரிசுப் பொருட்கள்,
கவிதைகள், கடிதங்கள்
புகைப்படங்கள் எல்லாவற்றையும்
எடுத்துப் பார்த்து கதறினான்..
அவளின் புகைப்படத்திலிருந்து
அவளது கை நீண்டு
அவனது கண்ணீரை துடைக்க
நீட்டிய கையை
அவன் இப்போது விடாமல்
பிடித்துக் கொண்டிருக்கிறான்..

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

காதல் கவிதை

எல்லோரும் விரும்பக்கூடிய ஒரு
கவிதையை எழுதுவது
அவ்வளவு சுலபமானதல்ல..

காதலைச் சொல்லும் கவிதையெனில்
அது வலியைச் சொன்னால்
அதை விட வேறு பிரச்சினை
கண்ணுக்குத் தெரியவில்லையா? என்பார்கள்..
அது சந்தோஷத்தை சொன்னால்
சமூகம் சார்ந்து என்ன சொன்னாய்? என்பார்கள்.

எல்லோரும் விரும்பக்கூடிய ஒரு
காதல் கவிதையை எழுதுவது
அவ்வளவு சுலபமானதல்ல..

விலை

எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது..
நாம் விதைக்கிற ஒரு வார்த்தைக்கு
நாம் வெறுக்கிற ஒரு சம்பவத்திற்கு
நாம் விரும்புகிற ஒரு நிகழ்விற்கு
நாம் மறைக்கிற ஒரு இரகசியத்திற்கு
நாம் மறக்கிற ஒரு நினைவிற்கு
நாம் புறக்கணிக்கிற ஒரு நேசத்திற்கு
நாம் வேண்டுகிற ஒரு கனவிற்கு
நாம் சிந்துகிற ஒரு துளி கண்ணீருக்கு
நாம் நிராகரிக்கிற ஒரு செயலுக்கு
நாம் ஏற்றுக் கொள்கிற ஒரு தண்டனைக்கு
நாம் சந்திக்கிற ஒரு பிரச்சினைக்கு
நாம் மறுதலிக்கிற ஒரு யாசிப்புக்கு
நாம் வைத்திருக்கும் ஒரு பிடிவாதத்திற்கு
எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது..

கனவுகள்

நூறு கனவுகள் கண்டாலே
ஆறு கனவுகள் பலித்திடுமெனில்
என் கனவுகள் எல்லாம்
உன்னைச் சேர்வதாகவே இருக்கும்..

மஞ்சள் நிறப் பட்டாம் பூச்சி

கண்ணாடியில் தனது பிம்பத்தையே
கண்டு மிரட்சியடைந்து
ஆக்ரோஷத்துடன் மோதும்
அந்த மஞ்சள் நிறப் பட்டாம் பூச்சியுடன்
பேச வேண்டும் போலிருந்தது..

சில வார்த்தைகள் சொல்ல
பட்டாம்பூச்சி கேட்டுக் கொண்டு
என் தலையணை அருகே அமர்ந்துகொண்டது..
சிறிது நேரம் அதன் வண்ணங்களை
என்மேல் பூசி விளையாடிவிட்டு
உறங்கிப் போனது..
நானும் உறங்கபோகிறேன்..

தூக்கத்திலிருக்கும்
அறைத் தோழிகள்
நாளை புகார் செய்யக்கூடும்
தூக்கத்தில் உளறினேன் என..