புதன், 29 செப்டம்பர், 2010

ஒரு காதலின் கதை

அவளுக்கும் அவனுக்கும்
ஒருவரையொருவர் பிடித்திருந்தது..
அது நட்பா? காதலா?
என இருவரும் குழம்பித்
திரிகையில்
அது காதல்தான் என்று அவளும்
அது நட்புதான் என்று அவனும்
முடிவு செய்து கொண்டனர்..

அவள் காதலின் அத்தனை கதவுகளையும்
அலங்கரித்தாள்
அவன் நட்பின் அத்தனை கனவுகளையும்
அலங்கரித்தான்..
இரவுகள் காத்துக் கிடந்தன..
இருவரின் இணைப்பிற்காக..

தன் காதலை உறுதிபடுத்திக் கொள்ள
ஒருமுறை அதை பற்றி பேச ஆரம்பித்தாள்..
அவன் நட்பில் உறுதியாய் இருப்பதாகக்
காட்டிக் கொண்டான்..

அவளுக்கு அவனைத் தவிர
எந்த யோசனையும் இல்லை..
அவனுக்கு இவள் காதலைப் பற்றி
யோசனை இல்லை..
அவள் எத்தனை முறைகளில்
வெளிக்காட்ட முடியுமோ
அத்தனை முறையிலும்
காதலைச் சொன்னாள்..
அவன் எத்தனை முறை
மறுதலிக்க முடியுமோ
அத்தனை முறையும் மறுத்து நின்றான்..

அவள் தற்கொலை செய்துகொள்வதாக
சொல்லியும்
அவன் பிடிவாதமாக இருந்தான்..
சிலநாட்கள் பேசாமல் நகர்ந்தது..
ஒருநாள் அவனுக்கு பேச வேண்டும் போல் இருந்தது..
அழைப்பில் வேறு யாரோ பேசினார்கள்..
அவள் மாரடைப்பு ஏற்பட்டு
இறந்து இரண்டு நாட்கள்
ஆனதாக சொன்னார்கள்..

அவனுக்கு இப்போது உலகம்
இருண்டுவிட்டது போலிருந்தது..
அவள் அளித்த பரிசுப் பொருட்கள்,
கவிதைகள், கடிதங்கள்
புகைப்படங்கள் எல்லாவற்றையும்
எடுத்துப் பார்த்து கதறினான்..
அவளின் புகைப்படத்திலிருந்து
அவளது கை நீண்டு
அவனது கண்ணீரை துடைக்க
நீட்டிய கையை
அவன் இப்போது விடாமல்
பிடித்துக் கொண்டிருக்கிறான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக